சனி பகவானின் பிறப்பு!
தலைமை நீதிபதி சனி பகவான்:மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி...எவனாக இருந்தாலும் சரி...சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள். தவறு செய்தவன் தான் பயப்பட வேண்டும். தவறு செய்யாதவர்கள் சனியினால் தோஷம் ஏற்பட்ட காலங்களில், இவருக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி வழிபட வேண்டும். சனிபகவானை வணங்கும் போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீதுபடக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. என்னதான் கோயில் கோயிலாக சென்று சனிபகவானை சுற்றி வழிபட்டாலும், நாம் உண்மையான மற்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காத வாழ்க்கை வாழ்ந்தால் எந்த தோஷத்திலிருந்தும் தப்பிக்கலாம். கிரகங்களுள் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்ற பெருமைக்கு உரியவர், சனிபகவான் மட்டுமே. தன்னை வழிபடுவோரின் வாட்டங்களைப் போக்கும் வல்லமை இவருக்கு உண்டு.
சனி பகவானின் பிறப்பு: சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவியார்! சாயாதேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் புதல்வராக அவதரித்த சனீஸ்வர பகவானின் புராண வைபவம் நமக்கு பேரருளையும், செல்வத்தையும் அளிக்கும். திருப்பாற் கடலில் ஸ்ரீமந்நாராயணன் தேவி, பூதேவி சமேதராய் - திருவாழி திருச் சங்குடன், கவுஸ்துப, வனமால கேயூர கிரீடங்களுடன் சேவை சாதிக்கிறார். இவரின் நாபிக் கமலத்தில் நின்று சதுர்முக பிரம்மன் அவதரித்தார். பிரம்மதேவன், விஷ்ணுவின் ஆணைப்படி பிரபஞ்சங்களை சிருஷ்டிக்கும் கர்த்தாவாக சத்தியலோகத்தில் எழுந்தருளினார். சிருஷ்டியின் மகிமையால் பிரம்மதேவன் மரீசி, அத்திரி, ஆங்கிரீஸ், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்னும் ஞானத் தவயோகியர்களைத் தோன்றச் செய்தார். அந்த மாமுனிவர்கள் சப்தரிஷிகள் என்னும் திருநாமத்தைப் பெற்றனர். சப்தரிஷிகளைப் படைத்த பிரம்மதேவன் தக்ஷப் பிரஜாபதி என்ற மகரிஷியையும் உலக ÷க்ஷமத்திற்காக சிருஷ்டித்து அருளினார். சப்தரிஷிகளில் மூத்தவரான மரீசி மகரிஷி. சம்பூதி என்னும் கன்னிகையைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் காசியப முனிவர் குமாரராகப் பிறந்தார். காசியப முனிவர், தக்ஷபிரஜாபதியின் குமாரத்தியான அதிதி என்பவளைத் திருமணம் செய்துக் கொண்டார். அதிதிக்கும், காசியப முனிவருக்கும் அநேக புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்கள் நல்ல தேஜஸைப் பெற்றிருந்தார்கள். அவ்வாறு அத்யந்த தேஜஸ் பொருந்திய காசியப புத்திரர்கள் துவாதச ஆதித்தியர்கள் என்ற திருநாமத்தைப் பெற்றனர். ஆதித்ய குமாரர்களில் மூத்தவர்தான் சூரிய பகவான்!
சூரிய பகவான் அழகானவர் - அவனிக்கு ஒளியாகத் திகழ்பவர் - சுவர்ண சொரூபமானவர் - பரமாத்மரூபிணியானவர் - தேஜோ மயமானவர்-ஆரோக்கியம், ஐசுவர்யம், கீர்த்தி, வெற்றி அனைத்தையும் அருளுபவர் - ஆயிரம் கிரணங்களைக் கொண்டவர் - சக்கராதி கிரகங்களுக்குத் தலைவன் - திவ்யமான ஏழு பச்சைக் குதிரைகள் பூட்டப் பெற்ற பொன் வண்ணத் தேரைச் செலுத்துபவர் - குரு குகனுக்கு ப்ரீதியானவர் என்றெல்லாம் போற்றப்படும் நவக்கிரக நாயகனாக விளங்குகிறார் சூரியபகவான்! பொன்மயமான சவுமனஸம் என்ற சிகரத்திலிருந்து புறப்படுகிறார். அங்கிருந்து புறப்பட்டு, ஜம்பூத் துவீபத்தில் வடக்கு திக்காக எழுந்தருளி எங்கும் பேரொளி பரப்புகிறார். சூரியதேவன் உத்திராயண காலத்தில் இந்த சிகரத்திலிருந்து புறப்படுகிறார். தக்ஷிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்துக்கு எழுந்தருளுகிறார். விஷுக் கனியின் போது இரண்டுக்கும் நடுவேயிருந்து எழுந்தருளுகிறார். சூரியதேவன் த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலாத் தேவியைத் திருமணம் செய்து கொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரிய தேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய அதிரூபவதியான புத்திரியும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சூரிய தேவனின் இல்லறக் கோவிலில் இன்புற்று வாழ்ந்து வந்த சுவர்ச்சலா தேவிக்கு நாளாக, நாளாக சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும்படியான சக்தி குறைந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில், சுவர்ச்சலாதேவி தனது துயர நிலையைச் சூரிய தேவனிடம் சொல்லும் படியான சக்தியற்றுப் போனாள். சுவர்ச்சலாதேவி கானகம் சென்று கடும் தவம் இருந்து உரிய சக்தியைப் பெற்று வருவதற்கு எண்ணினாள். அந்த எண்ணத்தையும் சூரியதேவனிடம் சொல்லும் ஆற்றல் அவளுக்கு இல்லாமற் போனது. சுவர்ச்சலா தேவி தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தாள். தனது மனோ சக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். நிழலில் நின்றும் உருப் பெற்று வந்த அந்த நளின சிங்கார வனிதை, தன்னைப் போன்ற உருவத்துடன் காணும் சுவர்ச்சலா தேவியைக் கண்டு திகைத்தாள்; அவளை நமஸ்கரித்து நின்றாள். சுவர்ச்சலா தேவி அவளைப் பார்த்து, எனது சாயையில் நின்றும் தோன்றியவளே! உனக்கு சாயாதேவி என்று நாம கரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப் போகிறேன். நான் திரும்பி வரும் வரை நீ என் கணவருடன் சுகித்து வாழ்வாயாக! என் குழந்தைகளான வைவசுதமனு, யமதர்மன், யமுனா ஆகியோர்களை அன்போடு அரவணைத்து வாழ்வாயாக! என்று கூறினாள். சுவர்ச்சலா தேவியின் சுந்தர மொழி கேட்டு சாயாதேவி, தேவி! தங்கள் சித்தம் எந்தன் பாக்கியம். இருப்பினும் இந்த எளியவளுக்கு உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். என்றாவது ஒரு நாள் நம் பதி எனது சிகையைப் பற்றி இழுக்கும் துர்பாக்கியம் ஏற்படுமாயின் அன்று நான் நம் நாயகரிடம் உண்மையை நவில்வேன். இது சத்தியம் என்றாள். சுவர்ச்சலா தேவியும் அதற்கு சம்மதித்தாள். சுவர்ச்சலாதேவி சந்தோஷத்துடன் தந்தை வீட்டிற்குப் புறப்பட்டாள். சுவர்ச்சலா, பதியின் பாதத்தை விட்டு நீங்கி, பிதாவான த்வஷ்டா இல்லம் சென்றாள். நடந்தவற்றைத் தந்தையிடம் கூறினாள். தந்தையார், சுவர்ச்சலாவின் செயலைக் கண்டித்தார். ஒரு பெண், பதியை விட்டு வருவது தர்மமாகாது. என்னைக் காண வேண்டுமென்றால் உன் பதியோடு தான் வரவேண்டும். எனவே சற்றும் தாமதியாமல் உன் பதியின் கிருஹத்திற்குச் செல்வாயாக! சுவர்ச்சலா தேவி சஞ்சலம் கொண்டாள். தந்தையின் அடி பணிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றாள். தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக, குதிரை உருவம் கொண்டு, தவத்தைத் தொடங்கினாள். சுவர்ச்சலாவின் அன்பு கட்டளைப்படி சாயாதேவி, சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள்.
சூரிய தேவனின் குழந்தைகளிடம் சாயா தேவி, மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருந்தாள். கண்ணும் கருத்துமாக அக்குழந்தைகளைக் காத்து வந்தாள். சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மா தான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். சுவர்ச்சலாவின் குழந்தைகளும், சாயா தேவியின் குழந்தைகளும் சாயாதேவியின் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாளாக நாளாக சாயா தேவி, தனது குழந்தைகளிடம் சற்று அதிகப்படியான வாஞ்சை செலுத்தினாள். சுவர்ச்சலா தேவியின் மகனான எமதர்மராஜனுக்கு இதனால் மனத்திலே வேதனை மிகுந்தது. தனது தாய்க்கு ஏன் இந்த பாரபக்ஷம் என்பதனை நினைந்து வருந்தினார். ஒரு நாள் எமதர்மராஜனுக்குத் தாயிடம் கோபம் மிகுந்து வந்தது. தந்தையாகிய சூரிய தேவனிடம் சென்றார். சிறிது காலமாகத் தாயார் தங்களைத் தரக் குறைவாக நடத்துவதாகச் சொல்லிக் கண் கலங்கினார். தர்மாத்மாவான, யமனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார் சூரியதேவன்! தருமபுத்திரா! தரும வழியில் நடந்து வரும் உனக்கே கோபம் வருகிறதென்றால் இதில் உண்மை இருக்கத்தான் செய்யும். நான் இப்போதே உனது குறையை நிவர்த்திக்கிறேன் என்று சூரியதேவன் மகனை அன்போடு அருகே அழைத்து, ஆரத் தழுவி ஆறுதல் சொன்னார். சூரிய தேவன் சாயாதேவி மீது கோபம் மிகக் கொண்டார். சாயா தேவியிடம், இதைப் பற்றி விசாரித்தார். சாயா தேவி மவுனம் சாதித்தாள். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதால், சூரிய தேவன் கோபத்தில் அவளது சிகையைப் பற்றி இழுக்க அது வரை பொறுமையாக இருந்த சாயாதேவி நடந்த விருத்தாந்தங்கள் அனைத்தையும் எடுத்துக்கூறி, தனது பிழையைப் பொறுத்தருளுமாறு பகலவனின் பாதங்களைப் பணிந்து கேட்டாள். இவற்றையெல்லாம் கேட்டு சூரிய தேவன், சாயா தேவியை க்ஷமித்தார்; எமதர்மராஜனும் சாயாதேவி மீது அனுதாபம் கொண்டார். சூரிய தேவன் ஞான திருஷ்டியால், சுவர்ச்சலாதேவி தவமிருக்கும் இடத்தை கண்டறிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றார். சுவர்ச்சலா தேவியை ஆனந்தத்தால் அநுக்கிரஹித்தார். சூரிய தேவனின் சக்தியால், சுவர்ச்சலா தேவிக்கு, இருபுத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று திருநாமம் பெற்றனர். இவர்கள் தேவலோக வைத்தியர்களாக விளங்கினர். ரைவதன் என்று மற்றொரு மகனும் பிறந்தான். சூரிய தேவன், சுவர்ச்சலா தேவியை அழைத்துக்கொண்டு, தமது லோகத்திற்குத் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரு தேவியர் சமேதராக பத்மாசனத்தில் எழுந்தருளி பாரெல்லாம் பவனி வந்தார்.
எமதர்மராஜன், காசி அருகேயுள்ள கோகர்ணம் என்னும் திருப்பதியில் சிவபெருமானை ஆராதித்து அற்புதமான தவம் இயற்றினார். எமதர்மராஜனின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் எமனைத் திரு நோக்கம் செய்து, ஆதவன் புதல்வா! உனக்கு சையமணி என்னும் நகரத்தைப் பரிபாலிக்கும் பாக்கியத்தை அருளுவோம். எமது அருளாணைப்படி பிதுர் பரிபாலன தர்மத்தை காலம் தவறாமல் கண்ணியத்துடன் நடத்தும் உனக்கு காலன் என்னும் நாமம் சித்திக்கும் என்று திருவாய் மலர்ந்தார். எமதர்மராஜனும் சிவனைப் போற்றி தென் திசைக்கு அதிபதியாக விளங்கினான். அதே போல் வைவசுதமனு வைது மன் வந்தர மனு ஆனார். ச்ருதசரஸ், மேரு மலையில் தவம் செய்து சாவர்ணீ என்ற திருநாமம் பெற்றான். அவன் ஏழாவது மன்வந்தரத்து மனுவானார். சாயா தேவியின் புத்தரி யமுனையும் , சுவர்ச்சலா தேவியின் புத்திரி தபதியும் நதிகளாயினர். தபதீ என்பவள் ஸமவரணன் என்ற மன்னனை மணந்தாள். அதன் பின்னர்தான் அவள் விந்திய மலையிலிருந்து பெருகி வரும் தபதி என்ற நதியாக மாறினாள் என்பது புராணம்! அசுவனி தேவர்கள், பகவானின் திருவருட் கிருபையால், நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரமாக வானிலே ஒளி வீசும் பேறு பெற்றனர். ரைவதனும் பகவானின் பேரளால் மனுவாகி ரைவத மனுவந்தரத்தில் சகல அண்ட சராசரங்களையும் ரட்சிக்கும் உன்னத மேன்மை அடைந்தான். ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒருவர் இந்திரனாக இருப்பார். இந்த பதினான்கு மனுக்களின் காலத்தில் பதினான்கு பேர் இந்திரனாக இருப்பார்கள். இவ்வாறு சூரிய புத்திரர்கள் பாரெல்லாம் போற்றும் பெருமை பெற்றனர். ச்ருதகர்மாவான சனீஸ்வரர், இளமை முதற்கொண்டே மற்ற புத்தர புத்திரிகள் எவருக்கும் இல்லாத ஓர் தனித்தன்மை பெற்ற விளங்கினார். சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் தனது லோகத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். சனீஸ்வரரும், சாயாதேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல் கடைசியில் மறைதல் என அவனது வாழ்கை நிறைவுறுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப்படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர். பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறப்பு இருப்பவனே பிறக்க இயலும்; அதுதான் நியதி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். விதை முளைக்கிறது; வளர்கிறது. இலை, பூ, காய், கனி என மாறுபாடுகளைச் சந்திக்கிறது; வாட்டமுறுகிறது; மறைகிறது என்பது நமக்குத் தெரியும். உடலில், ஆன்மவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனிபகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார். சம் சனைச்சராய நம: என்று சொல்லி, சனி பகவானுக்கு 16 வகை உபசாரங்களை அளித்து வழிபடலாம். நம: ஸூர்யாய ஸோமாய மங்களா புதாய ச குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவே நம: எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, 12 நமஸ்காரங்களைச் செய்தால், 12 ராசியில் வீற்றிருக்கும் கிரகங்களை வணங்கி வழிபட்டதாக ஆகிவிடும். உடல் - உள்ளத்தை வாடவைத்து, அடிபணிந்தால்தான் பலன் உண்டு என நினைக்க வேண்டாம். உள்ளத் தெளிவுடனும் ஈடுபாட்டுடனும் சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவனருளால் இன்பம் பொங்கும்; மூன்று நிலைகள் இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை பொங்கும் சனியாகவே நமக்குக் காட்சி தருவார். சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்திப்போம்.
சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் செகம் வாழ இன்னருள் தா! தா!
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் செகம் வாழ இன்னருள் தா! தா!
சனீஸ்வர பகவான் சங்கடங்களைத் தீர்ப்பவர்; மங்கலம் பொங்கும் மனையிலே ஒரு மனதாக, அவரைப் போற்றுவோர்க்கு உன்னதமான பதவியைப் பேரானந்தம் பொங்க அருளும் கருணைத் தேவன்! ஊழ்வினைப் பயனால், நம்மை ஆரம்பத்தில் சோதனைக்குள்ளாக்கும் சனிபகவானைத் தினமும் தியானித்து பூஜித்தால், அவர் நமக்கு ஏற்பட இருக்கும் இன்னல்களைக் குறைத்து இறுதியில் ஈடில்லா இன்பத்தைப் பெருக்குவார்! காகம் அமர்ந்து, மேற்கு திசை முகம் நோக்கி, நீலநிற வஸ்திரம் அணிந்து அபயஹஸ்தம் நல்கும் சனீஸ்வர பகவான் தாமச குணம் கொண்டவர்! சனீஸ்வர பகவான் தம்மைச் சரணடைந்தோர்க்கு, சஞ்சலங்களைத் தீர்த்து நல்ல வரங்களைத் தந்து சந்தோஷத்தை நிலை பெறச் செய்வதில் கற்பக விருட்சம் ! காமதேனு! காலச் சக்கரத்தைப் பிளப்பதில் அவர் கதிரவனுக்கு நிகரானவர்.
சாப்பாடு போடுபவர்
ஒரு மனிதனின் வாழ்நாளை நிர்ணயம் செய்வதும், அவரவர் தகுதிக்கேற்ப சாப்பாடை வழங்குபவரும் சனி பகவானே. எனவே அவரை ஆயுள்காரகன் என்றும், ஜீவனகாரகன் என்றும் சொல்வர். அவர் தர்மப்பிரபு. தர்மத்துக்கு மிக மிக கட்டுப்படுபவர். பூஜைக்குச் சென்ற நளன், தன் காலில் சரியாக தண்ணீர் ஊற்றிக் கழுவவில்லை என்பதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூஜா தர்மத்தை மீறியதாக ஏழரை ஆண்டுகள், அவனது குடும்பத்தையே பாடாய் படுத்தியவர். எல்லாம் பர்பெக்ட்ஆக இருக்க வேண்டும் என்று அதிகம் எதிர்பார்ப்பார். இது சற்று தவறினாலும், அவரது கோபக்கனலுக்கு ஆளாகி விடுவோம். அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் சாப்பாடு கிடைக்கும். அதுபோல, ஆயுளை நிர்ணயம் செய்பவராகவும் திகழ்கிறார்.
நினைத்ததை நடத்துபவர்
ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். பார்வதி சிவனிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி? சிவன் பார்வதியிடம், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு, என சொல்லிவிட்டு சென்றார். சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன், என்றார். சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன், என்றார்.எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்! என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.