kovilpatti famous

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா



கோவில்பட்டி:கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் இரண்டாம் நாள் யாகசாலை பூஜைகள் நடந்தது. மேலும் மஹாகும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறை துணை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை மறுநாள் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் (ஜன.25) துவங்கியது. தொடர்ந்து முதல் நாள் பூஜைகள் முடிந்து நேற்று (ஜன.26) இரண்டாம் நாள் பூஜைகள் நடந்தது. இதையொட்டி காலையில் மங்கள இசையுடன் இரண்டாம் கால பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், இரண்டாம் கால வேள்வி வழிபாடு, நிறை அவி அளித்தல், ஒளி வழிபாடு ஆகிய பூஜைகள் நடந்தது. இதையடுத்து மாலையில் மங்கள இசை, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், மூன்றாம் கால வேள்வி வழிபாடு, நிறை அவி அளித்தல், ஒளி வழிபாடுகள் நடந்தது. மேலும் இன்று நான்கு மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் நடக்கிறது. இந்நிலையில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் இப்பகுதியில் பெரும் எதிர்பார்பையும், ஆவலையும் ஏற்படுத்தியிருப்பதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மஹாகும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் (ஜன.25) நெல்லை சரக டிஐஜி வரதராஜூ நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார், கோவில்பட்டி ஆர்டிஓ பொன்னியின் செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் வீரராஜன், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் உள்பட பலர் இருந்தனர். இந்நிலையில் நாளை மறுநாள் (ஜன.29) மஹாகும்பாபிஷேகம் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

Leave a Reply