circket

யுவராஜ் சிங்கிற்கு கேன்சர்: நுரையீரல் கட்டியால் ஆபத்து:அமெரிக்காவில் தீவிர சிகிச்சை




பாஸ்டன்: யுவராஜ் சிங்கின் நுரையீரலில் ஆபத்தான "கேன்சர்' கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
 இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், நமது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில், இவரது இடது நுரையீரலில் "கோல்ப்' பந்து அளவுக்கு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. "இது வெறும் கட்டி தான்; கேன்சர் நோய் அல்ல' என, இவரது தாயார் ஷப்னம் சிங் கூறினார்.
அதிர்ச்சி செய்தி:
இந்தச் சூழலில், யுவராஜுக்கு ஏற்பட்டுள்ளது கேன்சர் கட்டி தான் என்ற அதிர்ச்சி தகவலை, அவரது பிசியோதெரபிஸ்டும் டாக்டருமான ஜதின் சவுத்ரி நேற்று தெரிவித்தார். பொதுவாக 0 நிலையில் கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை ஆரம்பம் என்பர். 1 முதல் 4ம் நிலை வரை இருந்தால், கேன்சர் கிருமி வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக அர்த்தம். யுவராஜின் கட்டி, நிலை 1ல் உள்ளதாம். இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரப்பி' சிகிச்சை மேற்கொணடு வருகிறார்.
இது குறித்து சவுத்ரி கூறியது:
யுவராஜ் நுரையீரலில் இருப்பது கேன்சர் கட்டி தான். இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது அல்ல. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டதால், குணப்படுத்திவிடலாம். கட்டியின் சில பகுதிகள் இருதயத்தின் ரத்தநாளங்களுக்கு மேல் உள்ளது. இதனால் கட்டி உடைந்து விடும் அபாயம் உள்ளது. ஆனாலும், 100 சதவீதம் குணப்படுத்தக் கூடியது தான்.
"ஆப்பரேஷன்' வேண்டாம்:
இவருக்கு "கீமோதெரப்பி' சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். கேன்சர் நோயாக இருக்கும் என சந்தேகித்த போது, ஆறு முறை "கீமோதெரப்பி' சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். ஏற்கனவே ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்ததால், தற்போது மூன்று சுழற்சி முறையில் "கீமோதெரப்பி' கொடுத்தால் போதும். நல்லவேளை "ஆப்பரஷேன்' எதுவும் தேவைப்படவில்லை.
வரும் மார்ச் மாத இறுதியில் "கீமோதெரப்பி' சிகிச்சை முடியும். பின் யுவராஜுக்கு மீண்டும் "சிடி' ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். ஏப்ரலில் முழுமையாக தேறிவிடுவார். மே மாதத்தில் கிரிக்கெட் விளையாடலாம். முன்பைவிட தற்போது உற்சாகமாக இருக்கிறார். மனதளவில் தைரியமாக உள்ளார்.
இவ்வாறு சவுத்ரி கூறினார்.
"ரிப்போர்ட்' காணவில்லை
யுவராஜின் முதல் "பயோப்சி' தொடர்பான அறிக்கை காணாமல் போனதாக டாக்டர் ஜதின் சவுத்ரி தெரிவித்தார். இவர் கூறுகையில்,""இந்திய மருத்துவமனை ஒன்றில் யுவராஜுக்கு தவறாக சோதனை செய்யப்பட்டதால், கேன்சர் அறிகுறியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தவிர, இவரது காரில் இருந்து முதல் "பயோப்சி' தொடர்பான "ரிப்போர்ட்' காணாமல் போனது. இரண்டாவது "ரிப்போர்ட்' ஆஸ்பத்திரியில் இருந்து மறைந்தது. இந்த ஆஸ்பத்திரியின் பெயரை வெளியிட விரும்பவில்லை. ரஷ்யாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் தான், அமெரிக்காவில் உள்ள டாக்டர்களின் ஆலோசனையை பெற்று "கேன்சர்' கட்டி என்பதை உறுதி செய்தார்,''என்றார்.
முதல்வர் கவலை
யுவராஜ் விரைவில் குணமடைய வேண்டுமென நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். இவர்களுடன் சக வீரர் ஸ்ரீசாந்த், டென்னிஸ் நட்சத்திரம் ரோகன் போபண்ணா, காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் சேர்ந்து கொண்டுள்ளனர். மோடி கூறுகையில்,"யுவராஜ் உடல்நலம் பாதித்த விஷயம் கேள்விப்பட்டு கவலை அடைந்தேன். போராடும் குணம் கொண்ட இவர், விரைவில் மீண்டு வருவார். இந்திய அணிக்காக விளையாடுவார்,''என்றார். 
எனக்கு தெரியாது: தோனி
இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,""யுவராஜுக்கு கேன்சர் இருப்பது பற்றி எனக்கு தெரியாது. சமீப காலமாக இவரை தொடர்பு கொள்ளவில்லை. அதிரடியாக பேட் செய்து போட்டியின் போக்கை மாற்றக் கூடியவர். பந்துவீச்சிலும் அசத்துவார். விரைவில் உடல் நலம் தேறுவார்,''என்றார்.

Leave a Reply