நவராத்திரி ஆறாம் நாள்(03.10.11) வழிபாடு!



நவராத்திரியின் ஆறாம் நாளான நாளை, அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்றும், குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். இவள் பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள். நாளை மீனாட்சியம்மன் திருமணஞ்சேரி பார்வதி திருக்கல்யாணம் கோலத்தில் காட்சிதருகிறாள். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 27 கி.மீ., தூரத்திலுள்ள சிவத்தலம் திருமணஞ்சேரி. இங்குள்ள அம்பிகை, முனிவர்கள் செய்த யாகத்தீயில் இருந்து அவதரித்தாள். வீணை ஓசையை விட இனிய குரல்வளம் கொண்டவளாக இருப்பதால் யாழின் மென்மொழியம்மை என்று பெயர் பெற்றாள். இங்குள்ள சிவன் கல்யாண சுந்தரர் எனப்படுகிறார். மதுரையும் திருமண ÷க்ஷத்திரமே. ஒரு திருமண ÷க்ஷத்திரத்தில், இன்னொரு திருமண ÷க்ஷத்திரத்தைக் காண இருக்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள். கன்னிப்பெண்கள் திருமணஞ்சேரி செல்லாமலேயே, தங்களுக்கு தகுந்த மணாளன் வேண்டி, இன்று சென்று வரலாம். திருமணமானவர்கள் மாங்கல்ய பாக்கியம் வேண்டி செல்லலாம். திருமணஞ்சேரியிலுள்ள மூலவரை அருள்வள்ளல்நாதர் என்பர். ஆம்..அருள் வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே.
கருவுற்றிருந்த இருபெண்கள், பிறக்கும் குழந்தைகளின் மூலம் எதிர்காலத்தில் சம்பந்திகளாக வாழ்வது என்று தங்களுக்குள் உறுதி செய்து கொண்டனர். அதில் ஒருத்திக்கு பெண் குழந்தையும், மற்றொருத்திக்கு ஆமையும் பிறந்தது. அந்த ஆமை,திருமணஞ்சேரி இறைவனை வழிபட்டு ஆமையுருவம் நீங்கி, ஆணுருவம் பெற்றது. பின்பு அந்த இளைஞன், நிச்சயித்த பெண்ணையே திருமணம் செய்து மகிழ்ந்தான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடல் பெற்ற சிறப்பு உடையது. இத்தனை பெருமை பெற்ற திருமணஞ்சேரிக்குச் சென்று வந்த புண்ணியத்தைப் பெற மக்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் நாளை வாய்க்கிறது. திருக்கல்யாணத்திற்குப் பெயர் பெற்ற மதுரை மீனாட்சியை திருமணஞ்சேரி கல்யாண அலங்காரத்தில் கண்டு களிப்போம்.
நாளை நைவேத்யம்: வெண்பொங்கல்
பாடவேண்டிய பாடல்:
விடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம்
உடையானை ஊழி தோறூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.

நவராத்திரி ஏழாம் நாள் (அக்.4) வழிபாடு!



நாளை, நவராத்திரி ஏழாம்நாளில், அம்பாளை வித்யா லட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரை மலர் ஆசனம்அமைத்து, அதன் இருபுறமும் யானை பொம்மைகள் வைக்க வேண்டும். அம்பாளின் கையில் ஜெபமாலை, கோடரி, கதாயுதம், அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுத கலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும். வெள்ளைத் தாமரை மலர் மாலை சூட்ட வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவன் நமக்கென ஒரு வாழ்வைத் தந்திருக்கிறான். அது வளம் மிக்கதோ, ஏழ்மையானதோ.. எப்படி இருந்தாலும் ரசித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவர் வாழ்வைப் பார்த்து, அப்படி நமக்கு அமையவில்லையே என பொறாமைப்படக் கூடாது. இவ்வாறு நினைப்பதும், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டு அதை அடைய துடிப்பதும் அம்பிகைக்கு ஏற்புடையதல்ல. சொத்தைப் பறி கொடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் அக்னி பிழம்பாக மாறி, அநியாயம் செய்தவனை நிச்சயம் ஒருநாள் அழித்து விடும் என்பதை நாளைய அலங்காரம் உணர்த்துகிறது.
மகிஷன் என்ற அசுரனுக்கு பெரிய ராஜ்யம் இருந்தது. ஆனாலும், அவன் தேவலோகத்தின் மீது ஆசை கொண்டு, அதைப் பறித்துக் கொண்டான். சூரியன், சந்திரன், வாயு உள்ளிட்ட தேவர்களுக்கு கூட அங்கு இடமில்லாமல் போனது. முனிவர்களையும் யாகம் செய்யும் இடத்தில் இருந்து விரட்டி விட்டான். இவர்களது வயிற்றெரிச்சல் இணைந்து அக்னியானது. அதிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவளுக்கு எல்லா தெய்வங்களும் தங்களது ஆயுதங்களைக் கொடுத்தனர். அவள் மகிஷனை ஒழித்து மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள். நாளை, மீனாட்சி அம்மனின் மகிஷாசுரமர்த்தினி கோலத்தை தரிசித்தால், தீய சக்திகளிடம் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
நாளைய நைவேத்யம்: தேங்காய் சாதம்
பாட வேண்டிய பாடல்:
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனைத் துதித்தால்
என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம்
அவளைத் தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்
சர்வ மங்களம் கூடும்.
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்கா தேவி சரணம்

நவராத்திரி எட்டாம் நாள்(அக்.5)வழிபாடு!



அம்பாளை பிராஹ்மியாக அலங்கரிக்க வேண்டும். கையில் ஏடும், நெற்றியில் கண்ணும் இருக்க வேண்டும். இவள் சரஸ்வதியின் அம்சம் ஆவாள். வீடுகளில் மஞ்சளில் செய்த முகத்தை, வீணை, ஏடு, ஜபமாலையுடன் அலங்கரிக்க வேண்டும். இது முடியாதவர்கள், ஒரு மேஜையில் புத்தகங்களை அடுக்கி, அதன் மேல் சரஸ்வதி படம் வைத்தும் வணங்கலாம். மதுரை மீனாட்சியம்மன் நாளை சிவபூஜை அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாள். ஒருவன் அறிவு பெற்றதன் அடையாளமே அவன் கடவுளின் திருவடியை வணங்குவது தான் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அந்த நல்வழியை நமக்கு எடுத்துக் காட்டும் விதமாக மீனாட்சி சிவபூஜை செய்து வருகிறாள்.
அன்பே சிவம் என்று திருமந்திரம் இறைவனைப் போற்றுகிறது. அருளின் வடிவம் அம்பிகை. அருள் அன்பை பூஜிக்கும் ஆனந்த காட்சியே நாளைய அலங்காரமாகிறது. மீனாட்சிக்கு சுவாமியை விட முதன்மை கொடுப்பர். கணவன் தன் மனைவியை உத்தமமான இடத்தில் வைத்து, நல்ல முறையில் பார்த்துக் கொண்டால் அவள் கணவனைத் தெய்வமெனக் கொண்டாடுவாள் என்ற வாழ்வியல் தத்துவம் இதில் வெளிப்படுகிறது. நேற்றைய பொழுதில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தேவியை தரிசித்தவர்கள், சிவபூஜையையும் தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நாளை மீனாட்சியன்னையின் சிவபூஜையைத் தரிசித்து சிவபுண்ணியம் பெறுங்கள்.
நைவேத்யம்: பால்பாயாசம், சுண்டல், பொரி, அவல்
பாடவேண்டிய பாடல்:
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும்
எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெங்காலும்
அன்பர் கண்ணும் கருத்தும்
நிறைந்தாய் சகலகலாவல்லியே.

Leave a Reply