mahatma




பிறப்பும் தாய் தந்தையரும்


காந்தி வம்சத்தினர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் மளிகை வியாபாரிகளாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள் பலவற்றில் முதன் மந்திரியாக இருந்திருக்கின்றனர். ஓதா காந்தி என்ற உத்தம சந்திகாந்தி, என்னுடைய பாட்டனார். தாம் கொண்ட கொள்கையில் மிக்க உறுதியுடையவராக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் போர்பந்தரில் திவானாக இருந்தார். ராஜாங்கச் சூழ்ச்சிகளினால் அவர் போர்பந்தரை விட்டுப்போய் ஜூனாகட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது, அங்கு அவர் நவாபுக்கு இடது கையினால் சலாம் செய்தார். மரியாதைக் குறைவான அச்செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அப்படிச் செய்ததற்குக் காரணம் கேட்டதற்கு என் வலக்கரம் முன்பே போர்பந்தருக்கும் அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது என்றார் உத்தம சந்திர காந்தி.

ஓதா காந்திக்கு மனைவி இறந்துவிடவே இரண்டாம் தாரம் மணந்து கொண்டார். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரு பிள்ளைகள். ஓதா காந்தியின் இப்பிள்ளைகளெல்லாம் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளல்ல என்று என் குழந்தைப் பிராயத்தில் நான் உணர்ந்ததுமில்லை, அறிந்ததுமில்லை. இந்த ஆறு சகோதரர்களில் ஐந்தாமவர் கரம்சந்திர காந்தி என்ற கபா காந்தி, ஆறாம் சகோதரர் துளசிதாஸ் காந்தி, இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் மற்றொருவராகப் போர்பந்தரில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். கபா காந்தியே என் தந்தை ராஜஸ்தானிக மன்றத்தில் இவர் ஓர் உறுப்பினர். அந்த மன்றம் இப்பொழுது இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் சமஸ்தானாதிபதிகளுக்கும் அவர்களுடைய இனத்தினருக்கும் இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இந்த மன்றம் அதிகச் செல்வாக்குள்ள ஸ்தாபனமாக விளங்கியது. என் தந்தை ராஜ்கோட்டில் கொஞ்ச காலமும் பிறகு வாங்கானேரிலும் பிரதம மந்திரியாக இருந்தார். இறக்கும் போது ராஜகோட் சமஸ்தானத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தார்.

ஒவ்வொரு தரமும் மனைவி இறக்க, கபா காந்தி நான்கு தாரங்களை மணந்தார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளுக்கும் இரு பெண் குழந்தைகள் அவருடைய கடைசி மனைவியான புத்லிபாய், ஒரு பெண்ணையும் மூன்று ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நானே அதில் கடைசிப் பையன். என் தந்தையார் தம் வம்சத்தாரிடம் அதிகப் பற்றுடையவர், சத்திய சீலர், தீரமானவர், தயாளமுள்ளவர் ஆனால், கொஞ்சம் முன் கோபி அவர் ஓர் அளவுக்கு சிற்றின்ப உணர்ச்சி மிகுந்தவராகவும் இருந்திருக்க கூடும். ஏனெனில், தமக்கு நாற்பது வயதுக்கு மேலான பிறகே அவர் நான்காம் தாரத்தை மணந்து கொண்டிருந்தார். ஆனால், எதனாலும் அவரை நெறிதவறி விடச் செய்துவிட முடியாது. தமது குடும்ப விஷயத்தில் மட்டுமின்றி வெளிக்காரியங்களிலும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுவதில் கண்டிப்பானவர் என்று புகழ் பெற்றவர் சமஸ்தானத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த விசுவாசம் பிரபலமானது தம் சமஸ்தானாதிபதியான ராஜகோட் தாகூர் சாஹிபை ஒரு சமயம் உதவி ராஜிய ஏஜெண்டு அவமதித்துப் பேசிவிடவே, அதைக் கபா காந்தி ஆட்சேபித்துக் கண்டித்தார். உடனே ஏஜெண்டுக்குக் கோபம் வந்துவிட்டது. மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்படி கபா காந்தியிடம் கேட்டார். அப்படி மன்னிப்புக் கேட்க மறுத்துவிடவே அவரைச் சில மணி நேரம் காவலில் வைத்துவிட்டனர் என்றாலும் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கபா காந்தி உறுதியுடன் இருப்பதை ஏஜெண்டு கண்டதும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

பணம் திரட்ட வேண்டும் என்ற ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை. மிகக் கொஞ்சமான சொத்தையே எங்களுக்கு அவர் வைத்துவிட்டுப் போனார்.

அனுபவத்தைத் தவிர அவருக்குப் படிப்பு ஒன்றும் இல்லை. அதிகப்பட்சம் குஜராத்தி ஐந்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தார் என்றே சொல்லலாம். சரித்திரம், பூகோள சாத்திரம் ஆகியவை பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஆனால், நடைமுறைக் காரியங்களில் அவருக்கு இருந்த சிறந்த அனுபவம். அதிகச் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நூற்றுக் கணக்கானவர்களை வைத்து நிர்வகிப்பதிலும் அவருக்குத் திறமையை அளித்தது. சமயத்துறையிலும் அவருக்கு இருந்த பயிற்சி மிகக் கொஞ்சம். ஆனால், அடிக்கடி கோயில்களுக்குப் போவதாலும், சமயப் பிரசங்கங்களைக் கேட்பதாலும் அநேக ஹிந்துக்களுக்குச் சாதாரணமாக என்ன சமய ஞானம் உண்டாகுமோ, அது அவருக்கும் இருந்தது. குடும்பத்தின் நண்பரான படித்த பிராமணர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவர் தமது கடைசிக் காலத்தில் கீதையைப் படிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் பூiஜ செய்யும் போது கீதையிலிருந்து சில சுலோகங்களை அவர் வாய்விட்டுப் பாராயணம் செய்வதுண்டு.

என் தாயாரைப் பற்றி நான் நினைக்கும் போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே என நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்றுக் கொண்டவர். தாம் செய்ய வேண்டிய அன்றாட பூiஜயை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்தியக் கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த்தரிசித்துவிட்டு வருவது. ஓரு தடவையேனும் சாதூர் மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களையெல்லாம் மேற்கொள்ளுவார். அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டுவிடமாட்டார். சாந்திராயண விரதமிருந்த போது அவர் நோயுற்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், விரதத்தை விடாமல் அவர் அனுஷ்டித்து முடித்தார். தொடர்ந்து இரண்டு மூன்று உபவாச விரதங்கள் இருப்பதென்பதும் அவருக்குப் பிரமாதம் அல்ல. சாதுர்மாச காலத்தில் ஒரு வேளை ஆகாரத்தோடு இருப்பதும் அவருக்குப் பழக்கம். அது போதாதென்று ஒரு சாதுர்மாசத்தின் போது ஒன்றுவிட்டு ஒரு நாள் உபவாசம் இருந்து வந்தார். மற்றொரு சாதுர்மாச விதத்தின் பேது சூரியதரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டிருந்தார். அந்த நாட்களில் குழந்தைகளாகிய நாங்கள் வெளியில் போய் நின்றுகொண்டு, சூரியன் தெரிந்ததும் தாயாரிடம் போய்ச் சொல்லுவதற்காக ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம். கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி சூரியபகவான் தரிசனமளிக்கக் கருணை கொள்ளுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சில நாட்களில் திடீரென்று சூரியன் தோன்றுவான், தாயாருக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஓடுவோம். தூமே தரிசிப்பதற்காக அவர் வெளியே ஓடி வந்து பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள் மறைந்து, அன்று அவர் சாப்பிட முடியாதபடி செய்துவிடுவான் அதைப்பற்றிப் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு தான் தாயார் கூறுவார். நான் இன்று சாப்பிடுவதை பகவான் விரும்பவில்லை என்பார். பின்னர் வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருப்பார்.
என் தாயாருக்கு அனுபவ ஞானம் அதிகமாக உண்டு. சமஸ்தானத்தைப் பற்றிய விவகாரங்களெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய புத்திக் கூர்மைக்காக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். நான் குழந்தை என்ற சலுகையை வைத்துக் கொண்டு அடிக்கடி என் தாயாருடன் அரண்மனைக்குப் போயிருக்கிறேன். தாகூர் சாஹிபின் விதந்துவான தாயாருடன் என் தாயார் உற்சாகத்தோடு விவாதித்ததெல்லாம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

இந்தப் பெற்றோருக்குச் சுதாமாபுரி என்று கூறப்படும் போர்ப்பந்தரில் 1869, அக்டோபர் 2-ஆம் தேதி நான் பிறந்தேன். குழந்தைப் பருவத்தில் போர்பந்தரிலேயே இருந்தேன. அங்கே என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது எனக்கு நினைவிருக்கிறது. கொஞ்சம் சிரமத்தின் பேரில்தான் பெருக்கல் வாய்ப்பாட்டை நெட்டுரப் போட்டேன். மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் உபாத்தியாயரை ஏளனம் செய்து திட்டக் கற்றுக் கொண்டேன் என்பதைத் தவிர அந்த நாட்களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு நினைக்கவில்லை. இதிலிருந்து அப்பொழுது நான் மந்தபுத்தியுள்ளவனாக இருந்தேன் என்றும், எனக்கு ஞாபகசக்தி போதாமல் இருந்தது என்றம் யூகிக்க முடிகிறது.



குழந்தைப் பருவம்
எனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம். ராஜஸ்தானிக் மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார், போர்பந்தரிலிருந்து ராஜகோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன போர்பந்தரில் இருந்ததைப் போன்றே இங்கும் என்னடைய படிப்பைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமிலலை. சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்திருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நகரை அடுத்திருந்த ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். பன்னிரெண்டு வயதாகிவிடவே பிறகு உயர்தரப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தக் குறுகிய காலத்தில் என் ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித் தோழர்களிடத்திலோ ஒரு பொய்யேனும் எப்பொழுதும் நான் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். என் புத்தகங்களும் என் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள். சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம் விட்டது வீட்டுக்கு ஓடிவந்துவிடுவது - இதுவே எனது அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காதாகையால் உண்மையில் ஓட்டமாகத்தான் வீடுவந்து சேருவேன். இல்லா விட்டால் வழியில் யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம்.

உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப்பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்கா அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் "கெட்டில்" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன். உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில் , என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசியரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.

என்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்துவிடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது எனது சுபாவம். இதே ஆசிரியரிடம் வேறு பல குறைபாடுகளையும் பின்னால் அறியலானேன். ஏன்றாலும், அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன்.

அதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் அப்படியே இருந்து வருகின்றன. என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும், ஏனெனில் , சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்கு பிடிக்காது என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த சிவணனின் பிதிர் பக்தி நாடகம் (இது சிரவணன் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம் ) என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்த சமயத்தில் எங்கள் ஊருக்குப் படங்களைக் காட்டுவோரும் வந்திருந்தார்கள். நான் பார்த்தேன் படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச் சிரவணன் கூடையில் வைத்துக் காவடியாகத் தோளில் சுமந்து கொண்டு போனதைக் காட்டுவது. அப்புத்தகமும் இப்படமும் என் மனத்தில் அழியாத முத்திரை போட்டுவிட்டன. நீ பின்பற்றுவதற்கு இது ஒரு சரியான உதாரணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிரவணன் இறந்ததால் புத்திர சோகத்தோடு பெற்றோர் வருந்திப் பிரலாபித்து என் நினைவில் இன்னும் அப்படியே என் உள்ளத்தை உருக்கிவிட்டது. என் தந்தை, எனக்காக வாங்கியிருந்த வாத்தியத்தில் அந்தக் கீதத்தை வாசித்தேன்.

மற்றொரு நாடக சம்பந்தமாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில், ஒரு, நாடகக் குழுவினர் நடத்தி வந்த ஒரு நாடகத்தைப் பார்க்க என் தந்தையாரின் அனுமதி பெற்றேன். அரிச்சந்திரன் என்ற இந்த நாடகம், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எத்தனை தரம் அதைப் பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படாது. ஆனால் அதைப் போய் பார்க்க எத்தனை தடவைதான் என்னை அனுமதிப்பார்கள் ? அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது ? என்று அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொள்ளுவேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த சமயங்களில் அழுதும் விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது. என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்தரனும், சிரவணனும் வாழ்வின் உண்மைகள். அந்த நாடகங்களைத் திரும்ப, இன்று நான் படித்தாலும், முன்போலவே என் மனம் உருவாகிவிடும் என்பது நிச்சயம்.

Leave a Reply