நவராத்திரி மூன்றாம் நாள் (30.09.11) வழிபாடு!



நாளை அம்பிகையை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை கிரீடம், முதுகுத்தண்டு போன்ற வடிவுடைய வஜ்ராயுதம் ஆகியவற்றுடன், யானை வாகனத்தில் அமர்த்தி அலங்கரிக்க வேண்டும். பெரிய பதவிகள், நல்ல வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்க இவளிடம் வேண்டிக்கொள்ளலாம். மதுரை மீனாட்சியம்மன் நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். மீனாட்சியம்மன் மீது குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். இதில் வருகைப்பருவம் பகுதியில் அமைந்த ஒன்பதாவது பாடலான தொடுக்கும் கடவுட் பழம்பாடல் என்று தொடங்கும் பாடலைப் பாடும்போது மீனாட்சி ஒரு சிறுமியாக வந்தாள். திருமலைநாயக்கரின் கழுத்தில் இருந்த முத்துமாலையை கழற்றி, குமரகுருபரருக்கு சூட்டி விட்டு சந்நிதிக்குள் ஓடி மறைந்தாள். மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன.  அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண்குழந்தைளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை ஊசல் பருவம் என்று குறிப்பிடுவர். பிள்ளைத்தமிழ் பருவங்களின் அடிப்படையில் ஐப்பசியில் மீனாட்சிக்கு கோலாட்ட விழா நடக்கும். அப்போது அம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டியபடியே, கன்னிப்பெண்கள் கோலாட்டம் ஆடுவர். நவராத்திரியின் மூன்றாம் நாளான நாளையும் மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறாள். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக காட்சி தருகிறாள். அன்னையின் அருள்பெற ஊஞ்சல் பாடலைப் பாடி மகிழ்வோம்.
நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
பாட வேண்டிய பாடல்:
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே!
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே!
உத்தமி பைரவி ஆடுகவே!
வழிபடும் எங்கள் வாழ்வினிலே
வழித்துணையாய் வந்து ஆடுகவே!

நவராத்திரி நான்காம் நாள் (01.10.11) வழிபாடு!



அம்பிகையை நாளை வைஷ்ணவியாக வழிபட வேண்டும் : சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய ஆயுதங்களுடன், கருட வாகனத்தில் அமர்ந்தது போல அலங்கரிக்க வேண்டும். கோபியர்களை தன் மீது மோகம் கொள்ளச் செய்த கிருஷ்ணரின் வடிவம்தான் வைஷ்ணவியாகும். நவராத்திரி நான்காம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் மேருவைச் செண்டால் அடித்த கோலத்தில் காட்சி தருகிறாள். மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் பாண்டியநாட்டில் நல்லாட்சி நடத்தினர். அவர்களின் மகன் உக்கிரபாண்டியனுக்கு, காந்திமதி என்னும் பெண்ணரசியை மணம் செய்து வைத்தனர். அவனை மன்னனாக்கி அரியணையில் அமர்த்தினர். ஒருசமயம், பாண்டிய நாட்டில் மழைவளம் குறைந்து பஞ்சம் உண்டானது. நல்வழி காட்டும்படி சுந்தரேஸ்வரரை அவன் வழிபட்டான். அன்றிரவு இறைவன் கனவில் தோன்றி, ""உக்கிரபாண்டியனே! நாளை மேருமலைக்குப் புறப்படு. அதன் செருக்கை அடக்க உன்னிடமிருக்கும் செண்டால் அடி. அங்குள்ள குகையில் இருக்கும் தங்கத்தில் வேண்டிய அளவு எடுத்துக் கொள். குகையை மூடிவிட்டு, மீன் சின்னத்தைப் பொறித்துவிடு, என்று அருள்புரிந்தார்.
உக்கிரபாண்டியனும், மேருமலையை சென்றடைந்தான். அதன், உச்சியை செண்டால் அடித்தான். அலறிய மலை, மனித உருவெடுத்து ஓடி வந்தது. பாண்டியன் வருகைக்கான காரணத்தை அறிந்து, பொன் குவிந்திருக்கும் குகையைக் காட்டியது. தேவையான பொன்னை எடுத்துக் கொண்டு, மீன்சின்னத்தை பொறித்தான். நாடு திரும்பி, மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தான். நாட்டில் மழை பொழிந்து வளமும் கொழித்தது. உக்கிரபாண்டியனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்த நிகழ்வின் அடிப்படையில் மீனாட்சியம்மன் நாளை, மேருவை செண்டால் அடித்த கோலத்தில் காட்சி தருகிறாள். இதனை தரிசித்தவர்கள் பொன் பொருளோடு நல்வாழ்வு வாழ்வர்.
நாளைய நைவேத்யம்: புளியோதரை
பாட வேண்டிய பாடல்: அறம்பல புரிந்த
காமாட்சி அருளை அளிப்பாய் மீனாட்சி
ஆடலில் வல்ல அபிராமி
ஆனந்த தாண்டவ சிவகாமி
தாயாய் அருளும் தயாபரியே
தமியேனைக் காக்க வந்தருள்வாய்
சேயாய் உன்முன் வேண்டி நின்றோம்
‌ஷேமம் தர வேணும் அம்மா!

நவராத்திரி ஐந்தாம் நாள் (02.10.11) வழிபாடு!



அம்பிகையை நாளை மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். இவளை மஹதீ என்று அழைப்பர். அளவிட முடியாத பெரும் சக்தியாகவும், சர்வமங்களம் தருபவளாகவும், தர்மத்தின் வடிவமாகவும் இருக்கிறாள். உழவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு கேட்கும்வரம் தருவாள். நாளை மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறாள்.  மக்கள்நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியான மீனாட்சி, மீன் எப்படி கண்களை இமைக்காமல் முட்டைகளை பார்த்து குஞ்சாக்குகிறதோ அதுபோல, தன் அருள்பார்வையால் உயிர்களை நல்வழிப்படுத்துகிறாள். அதனால், மீன் போன்ற கண்களை உடையவள் என்னும் பொருளில் மீனாட்சி, கயற்கண்ணி என்ற பெயர்களோடு விளங்குகிறாள். அவள் ஆளும் நகரமும் தூங்கா நகரமாக உள்ளது. மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சி வில்பயிற்சி, வாள்பயிற்சி, குதிரையேற்றம் ஆகிய வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தாள். யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதியும், மனத்துணிவும் அவளின் இயல்பாக இருந்தன. ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்னும் விதத்தில் பாண்டியனும், தன் மகளுக்கு பட்டம் சூட்டி அழகு பார்த்தான். நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாள் அம்பிகை, அதே கோலத்தில் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறாள். சிம்மாசனத்தில் அமர்ந்து கிரீடம்,ஆபரணங்கள், செங்கோல் ஏந்தி காட்சி தருகிறாள். நாளை பட்டம் சூடும் பட்டத்துராணி மீனாட்சியின் பார்வை நம்மீது பட்டாலே, நம் வாழ்வில் வெற்றி உண்டாகும்.
நைவேத்யம்: கல்கண்டு சாதம்
பாட வேண்டிய பாடல்:
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே! மதுகரம் வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும்
இளவஞ்சிக் கொடியே! வருகவே!
மலையத்துவசன் பெற்ற
பெருவாழ்வே! வருக வருகவே!

Leave a Reply